பொதுத்தேர்வில் வெற்றி பெற பழநியில் மாணவர்கள் வழிபாடு
பழநி: பழநி முருகன் கோயிலில் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டி மாணவர்கள் வழிபாடு செய்வது அதிகரித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் விரைவில் துவங்க உள்ளன. இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்கள் பலரும் இரவு, பகல் பாராது படிக்கின்றனர். ஆன்மிகத்தலங்களுக்கு சென்று அதிக மதிப்பெண்கள் பெறவும், தளராமல் படிக்கவும் வேண்டி வழிபாடு செய்கின்றனர்.
அந்த வகையில், புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழநி முருகன் கோயிலுக்கு திண்டுக்கல் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுத்தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் வழிபாடு செய்ய வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி நிர்வாகங்களே மாணவர்களே அழைத்து வந்து வழிபாடு செய்வதும் வழக்கமாகி உள்ளது. நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நுாற்றுக்கணக்கானோ மலைக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அழைத்து வந்து பிரார்த்தனை செய்வதாக ஆசிரியர்கள் கூறினர்.