உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி போல சபரிமலையை மேம்படுத்த நடவடிக்கை

திருப்பதி போல சபரிமலையை மேம்படுத்த நடவடிக்கை

திருவனந்தபுரம் : திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள வசதிகளை போல, சபரிமலையிலும் ஏற்படுத்தப்படும் என, கேரளாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டது.

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல, 10 - 50 வயதுள்ள பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கடந்தாண்டு பெய்த கன மழை மற்றும் இந்த போராட்டங்களில், இந்த ஆண்டு, மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளின் போது, சபரிமலையில் கூட்டம் குறைந்தது.

இதனால், 100 கோடி ரூபாய் வருமானம் குறைந்ததாக, கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது. கோவில் பணத்தை, மாநில அரசு, மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. அதனால், உண்டியலில் பக்தர்கள் பணம் செலுத்த வேண்டாம் என, ஹிந்து அமைப்புகள் பிரசாரம் செய்தன.

இந்நிலையில், 2019 - 20ம் ஆண்டுக்கான, மாநில பட்ஜெட்டை, நிதி அமைச்சர், தாமஸ் ஐசக், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்; அப்போது, அவர் கூறியதாவது: சிலர் அரசியல் ரீதியாக, அய்யப்பன் கோவில் பிரச்னையை பயன்படுத்துகின்றனர். கோவிலின் வருவாயை, மாநில அரசு பயன்படுத்துவதில்லை; இது பொய்யான தகவல்.பல்வேறு பணிகள் மேற்கொள்ள, திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு, 100 கோடி ரூபாய், இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. அதேபோல், மலபார் மற்றும் கொச்சி தேவசம் போர்டுகளுக்கும், 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ளது போன்ற அனைத்து வசதிகளையும், சபரிமலையில் அளிப்பதற்கான நடவடிக்கையில், மாநில அரசு ஈடுபட்டுள்ளது. நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு வசதிகளை செய்வதற்காக, கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் மூலம், 141.75 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !