மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்: 2020 - 21ல் நடத்த ஏற்பாடு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவத்துக்கு பின் வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.
இக்கோயிலில் பழமையான வீரவசந்தராயர் மண்டபம் கடந்தாண்டு இதே நாளில் (பிப்.,2) நள்ளிரவு தீ விபத்துக்கு உள்ளாகி ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பழமை மாறாமல் புனரமைப்பு பணியை மேற்கொள்ள பொதுப்பணித்துறை ஓய்வு தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைப்படி 20 கோடி ரூபாய் மதிப்பில் வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக நாமக்கல் மாவட்டம் பட்டினம் பகுதியில் பழமையான, குளிர்ச்சியான, நன்கு விளைந்த கருங்கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனை வெட்டி எடுத்து கொள்ள அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2009 ல் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். எனவே, வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணியை விரைவில் முடித்து 2020 - 21 ல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.