உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல குணங்கள் உருவாக பக்தி அவசியம்!

நல்ல குணங்கள் உருவாக பக்தி அவசியம்!

பீளமேடு : நல்ல குணங்கள் உருவாக பக்தி இருக்க வேண்டும், என, வேலூர் பொற்கோவில் சக்தி அம்மா பேசினார். கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், வேலூர் நாராயணி பொற்கோவில் சார்பில், "சூக்த ஹோமம் நடந்தது. உலக மக்களுக்கு அமைதி, இயற்கை வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை கிடைக்க, இந்த ஹோமம் நடந்தது. பொற்கோவில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. ஹோமம் முடிந்ததும், சக்தி அம்மா பேசியதாவது: உலகில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகின்றனர். இதற்கென பூஜை, தியானம் செய்தாலும், மனதில் ஏதோ கஷ்டம், துக்கம் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. யாருக்கும் எந்த கஷ்டமும், கொடுக்காமல் இருந்தாலும், துன்பம் வருகிறது. இத்துன்பத்துக்கு காரணம், நாம் தினமும் செய்யும் பணிகள், கர்மா காரணமாக அமைகிறது. இந்த கர்மா, இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி, அனைத்து ஜென்மத்திலும் தொடரும். இந்த பிறவியில் நல்ல காரியங்களை செய்தால், அதன் பூர்வ ஜென்ம பலன், அடுத்த பிறவியிலும் தொடரும். முடிந்தவரை நல்ல காரியங்களையே செய்தால், பாவங்களை போக்கும். பாவங்களை போக்க தேவை பக்தி. ஒருவரிடம் பக்தி இருக்கும் போது தான் நல்ல குணங்கள் இருக்கும். கடவுளின் நாமத்தை உச்சரிக்கும்போது, நல்ல எண்ணங்கள் உருவாகும். இந்த குணம், துக்கத்தை விலக்கி, சந்தோஷத்தை அளிக்கும். மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க, அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, சக்தி அம்மா பேசினார். காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வராகி மணிகண்ட சுவாமிகள், நீலமலை சித்தர், குற்றாலம் அருணாச்சல சுவாமிகள், தீர்த்தகிரி முருகன் சித்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !