உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான சோழர் கால கோவில் மார்ச் 7ல் கும்பாபிஷேக விழா

பழமையான சோழர் கால கோவில் மார்ச் 7ல் கும்பாபிஷேக விழா

அன்னூர் : அன்னூர் அருகே மிகவும் பழமையான மகா காளீஸ்வரர், கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், மார்ச் 7ம் தேதி நடக்கிறது. அன்னூர், மொண்டிபாளையத்தில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில், ஆலத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், வீரசோழன் கல்வெட்டும், வட்ட எழுத்து கல்வெட்டுகளும் உள்ளன. ஒய்சால மரபைச் சேர்ந்த வீரவல்லாளன் கல்வெட்டும் உள்ளது. இந்த ஊரில் 2,000 ஆண்டுகளுக்கு முன் கரிய காளியம்மன் கோவில் இருந்ததாக, செப்பேடுகள் தெரிவிக்கின்றன. கல்வெட்டு தகவலின்படி 1,662ம் ஆண்டு, திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. பழமையான இக்கோவிலில், கருங்கல்லில் கருவறை, அர்த்த மண்டபம், விமானம் மற்றும் மகா மண்டபம் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், 300 ஆண்டு பழமையான சிவாலயம் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் இருந்த சிவாலயத்தில், கருவறை, விமானம், அர்த்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், முருகன் திருவுருவங்கள் சிவாலயம் முன் அமைக்கப்பட்டுள்ளன. சிவதுர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கன்னிமார், கருப்பராயர் திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா, மார்ச் 5ம் தேதி காலையில் துவங்குகிறது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. 6ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வியும், மாலை மூன்றாம் கால வேள்வியும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. 7ம் தேதி காலை 9.30 மணிக்கு, விமானம் மற்றும் மும்மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சாமிகள்,பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கல்வெட்டு ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட பல அடிகளார் பங்கேற்கின்றனர். செண்டை மேள இசை நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பேரூர், மணிவாசகர் மன்றத்தினர் தமிழ்முறைப்படி வேள்வி பூஜைகளை செய்கின்றனர். 6ம் தேதி இரவு வாண வேடிக்கையும், இருநாட்களும் ஜமாப் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்னூர்-சத்தி சாலையில் உள்ள பசூரிலிருந்து கோவில் சார்பில் வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. புளியம்பட்டியிலிருந்து கோவிலுக்கு டவுன்பஸ் உள்ளன. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !