உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலம் செண்பகாதேவி அம்மனை வழிபட அனுமதிக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

குற்றாலம் செண்பகாதேவி அம்மனை வழிபட அனுமதிக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

குற்றாலம் : குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒருபகுதியாக விளங்குவது குற்றாலம் மலையாகும். நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் ஒரு வரலாற்று தலமாக விளங்கி வருகிறது. இயற்கையின் இருப்பிடம், தேனருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி என அருவிகள் சூழ்ந்த இடம். உச்சியில் மூன்று சிகரங்கள் இருப்பதால் திரிகூடமலை என்றும், குற்றால மலை என்றும் அழைக்கப்படுகிறது. வறட்சி காலத்திலும் இயற்கை மாறுபடாமல் இருப்பதால் குற்றால மலை சிகரத்திற்கு பஞ்சந்தாங்கி எனும் பெயரும் உண்டு. அரிய வகை மூலிகை நிறைந்த இப்பொதிகை மலைச்சாரல் இனிய சுற்றுச்சூழலாக அமைந்து உடலுக்கும், உள்ளத்திற்கும் இனிமை தரக்கூடியதாக அமைந்துள்ளது. இங்கு வீசுகின்ற தென்மேற்கு பருவக்காற்றால் பெய்யும் மழையும், சாரலும் இப்பகுதியை வளப்படுத்தும். இம்மலையில் உற்பத்தியாகி வரும் ஆறு சிற்றாறு என்றழைக்கப்படும் சித்ராநதி தாமிரபரணியின் கிளை நதியாக விளங்கி இவ்வட்டார பகுதிகளை வளப்படுத்துகிறது. இத்தகைய வளமிக்க குற்றால மலையிலிருந்து சுமார் 3 கி.மீ.தூரம் உள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. செண்பக காடுகள் நிறைந்த இம்மலையில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் செண்பகாதேவி அம்மன் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்குகிறது. செண்பகதேவி அம்மன் கோயிலில் விழாக்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சித்ரா பவுர்ணமியன்று வெகு சிறப்பாக பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வந்தனர். இதுகுறித்து நீண்ட நெடிய வரலாறும் உண்டு. குற்றாலமும், செண்பகாதேவி அம்மன் கோயிலும் வழிபாட்டு தலமாக இருப்பதால் சித்ரா நதியும், வழிபாட்டு தலமும் மாசுபட்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. இருந்தபோதும் செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டிக்கிறது. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் பெற்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !