திருமழபாடி வைத்தியநாத ஸ்வாமி கோவில் மாசிமக பெருவிழா துவக்கம்
அரியலூர்: திருமழபாடி வைத்தியநாதஸ்வாமி கோவில் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதஸ்வாமி கோவில் உள்ளது. ஆதியும், அந்தமும் இல்லாத சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் இத்தலம், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது. புருஷா மிருக மகரிஷியால் பூஜிக்கப்பட்டதும், திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டதுமான இத்தலம், நந்தியெம்பெருமான் சுயாஸாம்பிகா தேவியை திருமணம் செய்து கொண்ட இடமாகும். வைகாசி விசாக நாளில் மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் மழுவேந்தி நடனமாடி காட்சியளித்த இத்தலம், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை மிக்கது. பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலின் மாசிமக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் உள்ளிட்டவற்றில், ஸ்வாமி அம்பாள் வீதிஉலா நடக்கிறது. மார்ச் நான்காம் தேதி திருக்கல்யாண உற்சவமும், பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் ஆறாம் தேதியும் நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயிலின் நிர்வாக அதிகாரி கவுதமன், தக்கார் ராமமூர்த்தி மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.