இளம்பிள்ளை அருகே, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வீரபாண்டி: இளம்பிள்ளை அருகே, வேம்படிதாளம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 9ல் தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்கியது. அழகிரிநாதர் கோவிலில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் புனிதநீர் நிரம்பிய குடங்கள், முளைப்பாரி பாலிகை தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேற்று (பிப்., 11ல்) காலை, 6:00 மணிக்கு நான்கு கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் குடங்களை, சிவாச்சாரியார்கள் தலையில் ஏந்தி கோவிலை வலம் வந்து, கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கோவில் முன் கூடியிருந்த பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி என, கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டனர்.
* ஆட்டையாம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில், கடந்தாண்டு புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களால், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் பஞ்சலோக சிங்க வாகனம் செய்யப்பட்டு, கோவிலில் நேற்று (பிப்., 11ல்) ஒப்படைக்கப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று (பிப்., 11ல்) பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.