சேலத்தில் ராகு - கேது பெயர்ச்சி பூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்
சேலம்: ராகு - கேது பெயர்ச்சியை யொட்டி நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வாக்கிய பஞ்சாங்கப்படி, ராகு பகவான், நேற்று (பிப்., 13ல்), கடகத்திலிருந்து மிதுனத்துக்கும், கேது பகவான், மகரத்திலிருந்து தனுசுக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதையொட்டி, சேலம், அஸ்தம்பட்டி, மாரியம்மன் கோவிலில், கேது, ராகு பகவான்களுக்கு, நேற்று (பிப்., 13ல்), சிறப்பு அபிஷேகம், யாக வேள்வியுடன் பூஜை நடந்தது. அதேபோல், சேலம், வேம்பரசர் விநாயகர், ஊத்துமலை முருகன், வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். திருக்கணித பஞ்சாங்கப்படி, மார்ச், 7ல், ராகு - கேது பெயர்ச்சி நடப்பதால், அன்றும் கோவில்களில் சிறப்பு யாகம், பூஜை நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.