உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமக தேரோட்டம் இன்று (பிப்.19) காலை நடக்கிறது.
உத்தமபாளையத்தில் உள்ள இக்கோயில்பழமையானதும், பிரசித்திபெற்றதுமாகும். தென் காளஹஸ்தி, காலஷர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்று பெயர் பெற்றது.
ராகு கேதுதனித்தனி சன்னதிகளில் தம்பதியர் சகிதமாக எழுந்தருளியுள்ளது தனிச் சிறப்பாகும். கடந்த 80 ஆண்டாக ஓடாமல் நிறுத்தி வைத்திருந்த தேரை, அனைவரும்சேர்ந்து பராமரிப்பு செய்து கடந்த பல ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டிற்கான மாசிமக தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 8ம் தேதி நடை பெற்றது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் மண்டகப் படி நடத்தி வருகின்றனர். சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.18)காலை சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோகிலாபுரம்கிராம மக்களும், உத்தமபாளையம் கர்ணம் வீட்டாரும் இணைந்து நடத்தினர். .அதை தொடர்ந்து இன்று (பிப்.19) காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகளில் வலம் வந்து தேர் நிலையில் நிறுத்தப்படும். இதனை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.