ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா: குவிந்த பெண்கள்
ஆற்றுக்கால்: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் மாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தனது சினத்தால் மதுரையை எரித்த கண்ணகியை அமைதிப்படுத்த பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவதே ஆற்றுக்கால் பொங்கல் விழா. இந்த ஆண்டு 12ம் தேதி இரவு 10:20 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இன்று (20ம் தேதி) காலையில் பாண்டிய மன்னர் வதம் பாடி முடிக்கப்பட்டதும் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிபாடு கருவறையில் இருந்து தீபம் எடுத்து மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரியிடம் கொடுத்தார். தொடர்ந்து கோயில் அடுப்பில் பொங்கல் வைக்க தீ வளர்க்கப்பட்டது. கோயில் முன்புறம் உள்ள பிரதான அடுப்பில் தீ மூட்டியதும் ஒலி பெருக்கியில் செண்டை மேளம் இசைக்கப்பட்டு, கோயிலை சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் உள்ள லட்சக்கணக்கான அடுப்புகளில் தீ மூட்டப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது. பகல் 2:15 மணிக்கு பூஜாரிகள் எல்லா பகுதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்தினர்.