பாலக்கோட்டில் மாரியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று (பிப்., 20ல்) வெகு விமர்சையாக நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த திங்கட் கிழமை காலை கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் (பிப்., 19ல்)காலை, விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், கஜ பூஜை உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. முக்கிய நாளான நேற்று (பிப்., 20ல்), கடமடை, கோடியூர், பேளாரஹள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட, 18 கிராம மக்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீக்குண்டம் இறங்குதல், லாரி, டெம்போ வேன், மினிடோர், விமான அலகில் தொங்கியப்படியும், பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும், திரளான பக்தர்கள் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து, மாவிளக்கு தட்டு மற்றும் பூஜை பொருட்கள் எடுத்து, புதூர் பொன்மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர்.