உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம்

பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம்

பெரியகுளம்: ‘‘ஹரேராம ஹரே கிருஷ்ண மகாமந்திரம் கூறுவதால்  சகல நன்மைகளும் கிடைக்கும் ,’’என முரளீதரசுவாமி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையம் முதலாம் ஆண்டு விழா மற்றும் நாமகீர்த்தனம் 16 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராதை, கிருஷ்ணர் கல்யாணம் நடந்தது.  

முரளீதரசுவாமி பூஜைகள் செய்தார். தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் பகுதிகளில் உற்சவர் ராதை, கிருஷ்ணர் வீதி உலாவில் பஜனைபாடினார். தொடர்ந்து, லட்சுமிபுரத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் அவர் பேசியதாவது: கோயிலில்  பகவானுக்கு வஸ்திரம் துாய்மையாக இருந்தால், மக்கள் மனதும் ஆனந்தமாக இருக்கும். பகவானுக்கு நெய்வேத்தியம், பூஜை அதிகம் செய்வதால் அந்த ஊர் மக்கள் செழிப்பாக இருப்பர். பசி, பட்டினி, பஞ்சம் அண்டாது. வீட்டில் பூஜையறை இல்லையே என்ற கவலை வேண்டாம். விளக்கேற்றி ஹரே ராம ஹரே கிருஷ்ண மகாமந்திரம் கூறி வந்தால்  போதும். நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். நாம் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோமோ அந்த சூழ்நிலையை பொறுத்து மனம் லயிக்கும். தெய்வீக சூழலில் மனம் அமைதியாகவும், தன்னம்பிக்கை பளிச்சிடும். எதிர்மறை சிந்தனை இருந்தால் மனம் அல்லல்படும்,’’ என்றார். உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,  பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேசன் பார் டிவைனிடி டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !