தஞ்சாவூர் பெரியகோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று இரவு மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகா சிவராத்திரி. சிவபெருமானை விட்டு பிரியாத சக்தி அனைத்து உயிர்களும் உய்வுற நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது. இதை தொடர்ந்து, தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று மாலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் வந்தனர். இரவு 10.30 மணிக்கு பெருவுடையாருக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், மூலிகைகளாலான திரவிய பொடி ஆகிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. இவ்வழிபாட்டில், தஞ்சை மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.