சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி
சிதம்பரம், சிதம்பரத்தில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு, நடராஜர் கோவிலில், தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடக்கும் நாட்டியாஞ்சலி விழாவில், முன்னணி நடன கலைஞர்கள் பங்கேற்று, பரத நாட்டிய கலையை நடராஜருக்கு அர்ப்பணித்தனர்.
மகா சிவராத்திரியையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆறு கால சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தன. சிதம்பரம் சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்களின், தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், 5ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் அருகில் மங்கள இசையுடன் நேற்று மாலை துவங்கியது. துவக்க விழாவிற்கு கிருஷ்ணசுவாமி தீட்சிதர் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் நவமணி தீட்சிதர் வரவேற்றார். பிரபல பரத நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியன் குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து 29 பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஜெயப்பிரியா விக்ரமன், தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் நடேஷ்வர தீட்சிதர், நிர்வாகிகள் சிவசங்கர தீட்சிதர், நடராஜமூர்த்தி தீட்சிதர், வக்கீல் மகேந்திரன், தொழிலதிபர் ராமநாதன், ஆடிட்டர்கள் வைத்தியநாதன், கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் விழாவில், சிவ ராத்திரியை முன்னிட்டு, நேற்று (4ம் தேதி) அதிகாலை 5.30 மணி வரை பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. விழா வரும் 8ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
நாட்டியாஞ்சலி நிறைவு: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, புதுடெல்லி மத்திய பண்பாட்டு துறை, சங்கீத நாடக அகாடமி, தென்னிந்திய கலாசார மையம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து, 38ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, சிதம்பரம் தெற்கு வீதி ராஜா அண்ணாமலை செட்டியார் வி.எஸ்.டி டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 28ம் தேதி துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று சென்னை ஸ்ரேயா அபிநயலட்சுமி பரதம், கொல்கத்தா சஞ்ஜித் பட்டாச்சாரியா ஒடிசி, வாய்ப்பாட்டு உள்ளிட்ட 12 நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடந்தது. 5 நாட்கள் நாட்டியாஞ்சலி அறிக்கட்டளை விழாவில் பரதம், குச்சுப்புடி, ஒடிசி, கதக், நாட்டிய நாடகம், வாய்ப்பாட்டு, இசைக்கருவி கச்சேரி உள்ளிட்ட 46 நிகழ்ச்சிகளில் 367 கலைஞர்கள் பங்கேற்றனர். திருப்பதி திருமலை தேவஸ்தான தலைமை கணக்கு அதிகாரி சைலேந்திர காரு நிறைவுரை ஆற்றினர். நிகழ்ச்சியில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் வக்கீல் சம்மந்தம், வக்கீல் நடராஜன், டாக்டர் முத்துக்குமரன், சுவாமிநாதன், ராமநாதன், டாக்டர் கணபதி, சபாநாயகம் பங்கேற்றனர்.