கோவை கோதண்டராம சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா
கோவை: கோவை ராம்நகர் ராமர் கோவிலில், அபிஷேக ஆராதனைகள், ருத்ராபிஷேகம், நாம சங்கீர்த்தனங்களுடன், மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று மாலை, 5:00 முதல் இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நாமசங்கீர்த்தனங்கள் தொடர்ச்சியாக நடந்தன. மாலை 6:30 மணிக்கு, கோதண்டராம சுவாமி கோவில் தேவஸ்தான தலைவர் நாகசுப்பிரமணியம் தலைமையில், மகாசிவராத்திரி கணபதி பூஜை, மகா சங்கல்பம் நடந்தது.அதன்பிறகு, கோவிலில் உள்ள ஸ்ரீ வில்வ லிங்கேஸ்வரருக்கு, பக்தர்கள் தங்களது கரங்களாலே பாலபிஷேகம் செய்தனர்.இரவு, 8:00 மணிக்கு கால ருத்ராபிஷேகமும், 10:00 மணிக்கு இரண்டாம் கால ருத்ராபிஷேகமும், அதை தொடர்ந்து மூன்றாம் கால ருத்ராபிஷேகம், நான்காம் கால ருத்ராபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தன.அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவனின் அருளைப் பெற்றனர்.