சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலை உச்சிக்கு பால்குட ஊர்வலம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவராத்திரியையொட்டி பக்தர்கள் 2500 அடி உயர பிரான்மலை உச்சிக்கு பால்குடம் எடுத்து சென்றனர்.
திருக்கொடுங்குன்றம் என்று அழைக்கப்படும் இம்மலை சங்க இலக்கிய புகழ்பெற்றது. இதன் அடிவாரத்தில் உள்ள கோயிலில் சிவனும், பார்வதியும் மூன்று நிலைகளில் காட்சி தருகின்றனர். மலை உச்சியில் பாலமுருகன், விநாயகர் கோயில்கள் உள்ளன. ஆண்டு தோறும் சிவராத்திரியன்று பாலமுருகன் தெய்வீகப்பேரவை சார்பில் பால்குட விழா நடத்தப்படும். நேற்றும் (மார்ச்., 4ல்) வழக்கம் போல் காலை 9:00 மணிக்கு பால்குட விழா நடந்தது.
இதையொட்டி உற்ஸவ மண்டபத்தில் பாலமுருகன் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் ரதவீதிகள் வழியாக சென்றது. மலைப்பாதை வழியாக 2500 அடி உயர உச்சியை அடைந்தது. அங்கு பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
மலை உச்சிக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம, அருணகிரி மற்றும் ஐந்து ஊர் கிராம மக்கள் பங்கேற்றனர். பக்தர்கள் பல்வேறு பால்குடம் சுமந்து சென்றனர்.