உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரண்டப்பள்ளி வனப்பகுதியை கோதண்ட ராமர் சிலை கடப்பதில் சிக்கல்

பேரண்டப்பள்ளி வனப்பகுதியை கோதண்ட ராமர் சிலை கடப்பதில் சிக்கல்

ஓசூர்: தற்காலிக சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்காததால், பேரண்டப்பள்ளி வனப்பகுதியை, கோதண்டராமர் சிலை ஏற்றிய லாரி கடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஈஜிபுராவில், 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் கல் வெட்டி எடுக்கப்பட்டு, கோதண்டராமர் முகம், இரு கைகள் வடிவமைக்கப்பட்டன. கடந்த நவ., 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு, கர்நாடகாவுக்கு கோதண்டராமர் சிலை புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதிக்கு, கடந்த ஜன., 16ல், கோதண்டராமர் சிலை வந்தது.

பல்வேறு தடைகளுக்கு பின், கடந்த மாதம், 8ல், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையை அடைந்த லாரி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. சிலை கொண்டு செல்ல ஏதுவாக, அங்குள்ள சின்னாற்றின் குறுக்கே, தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. ஆனால், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தை கடக்க, வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் வனப்பகுதியில், 100 மீட்டர் துாரத்துக்கு சாலை அமைக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரிகளுடன், சிலை அமைப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், 8 முதல், நேற்று வரை, 24 நாட்களாக, ஒரே இடத்தில், கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘உரிய அனுமதி கிடைத்த பின், சாமல்பள்ளத்தில் இருந்து, கோதண்டராமர் சிலையை ஏற்றிச் செல்லும் லாரி புறப்படும்’ என, சிலை அமைப்பாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !