மகா சிவராத்திரி விழா: உடுமலை கோயில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சிவாலயங்களில், மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, பாரம்பரியமாக, பூலாங்கிணறு கிராமத்திலிருந்து, திருச்சப்பரம் மற்றும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். வழியோர கிராமங்களிலுள்ள மக்கள் திருச்சப்பரம் மீது, உப்பு, தானியங்கள் அர்ப்பணம் செய்து வேளாண் வளம் சிறக்க வழிபட்டனர். நேற்றுமுன்தினம் இரவு, திருச்சப்பரம் திருமூர்த்திமலை கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து, இரவு, 8:00 முதல் கால பூஜை, அபிஷேகம், தீபாராதனையும், இரவு, 10:00க்கு, இரண்டாம் கால பூஜை, இன்று, அதிகாலை, 2:00க்கு, மூன்றாம் கால யாக பூஜை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், 16 தீப மகா தரிசனம் மற்றும் தொடர்ந்து பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, மகா சிவராத்திரி நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்று, மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்தனர். இரவு முழுவதும், கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.சோமவாரபட்டி, அமரபுயங்கீஸ்வரர், மறையூர், கோவில் கடவு தென்கைலாச நாதர் ஆலயம், காந்திநகர் சவுந்தரநாயகி உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில், கொடிங்கியம் மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளிட்ட சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா, சிறப்பு பூஜைகள் நடந்தன.உடுமலை சாய்ராம் லே அவுட் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சாய் பஜனை நடந்தது.