பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மாலை, 6:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, 108 சங்குகள் ஆவாகனம், கலச பூஜை, மூலமந்திர ஹோமம், முதல் கால பூர்ணாகுதி பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து நான்கு கால வழிபாடும், ஹோம பூர்ணாகுதி, கலச அபிஷேகம் வழிபாடு நடந்தது.கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மங்கள இசையுடன் சிவராத்திரி விழா துவங்கியது. அனுக்கிரக, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம், அன்னதானம் நடந்தது. இரவு, கரப்பாடி இளைஞரணியின் தேவராட்டமும், நான்கு கால அபிஷேக பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு ஆனைமலை உலக நல வேள்வி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை யொட்டி, நான்கு கால யாக பூஜைகளும்; நேற்று (மார்ச்., 5ல்) காலை, அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது.குள்ளக்காபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், நெல்லுக்குப்பம்மன் கோவிலில், சக்தி அழைத்தல், சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. இரவு முழுவதும் சிறப்பு கால வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில்,மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில், எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில், நேற்றுமுன் தினம் (மார்ச்., 4ல்) மாலை, 6:00 மணிக்கு, 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.கோவிலில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டனர். இரவு முழுவதும் பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். அதிகாலை, 4:00 மணிக்கு சிவனுக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.