உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், மாசி திருவிழாவில் பொங்கல் வழிபாடு

சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், மாசி திருவிழாவில் பொங்கல் வழிபாடு

சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், மாசி திருவிழாவையொட்டி, நேற்று (மார்ச்., 5ல்), தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவிலில், காலை, குண்டம் இறங்குதல் நடந்தது. அதற்காக, திருமணிமுத்தாற்றிலிருந்து குளித்துவிட்டு, ஈரத்துணியுடன் வந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன், தீ மிதித்து, வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, பலர் குடும்பத்துடன் வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இரவு, சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

பால்குட ஊர்வலம்: இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டி, சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சத்தாபரணம் நடந்தது. அதையொட்டி நடக்கும் பூஜைக்கு, திரளான பெண்கள், ஊர்வலமாக, பால்குடங்களை எடுத்து வந்தனர். செல்லியாண்டி அம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம், தோப்பூர் வழியாக, சின்னமாரியம்மன் கோவிலை அடைந்தது. பின், பெண்களே, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். ஒட்டப்பட்டி, ஆனந்தாயி அங்காளம்மன் கோவிலில், காலை, ஸ்ரீபரமானந்தம் சுவாமிகள், குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, திரளான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அலகு குத்தி...: சங்ககிரி, மலைக்கோட்டை, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி, அக்னி சட்டி ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். அல்லிகுண்டம், மாரியம்மன் கோவிலில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, அம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !