உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று, மயான கொள்ளை விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா, 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று, மயான கொள்ளை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. 10:40 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில், விஸ்வரூப கோலத்தில், அங்காளம்மன், மயானத்திற்கு புறப்பட்டார்.

அம்மனுக்கு முன், பூசாரிகள், பிரம்ம கபாலத்துடன் ஆடியபடி சென்றனர். வழி நெடுகிலும் இருந்த ஏராளமான பக்தர்கள், நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இறைத்தனர். பலர் கோழியை பலி கொடுத்தும், உயிருடனும் காணிக்கை செலுத்தினர். மயானத்தில் அம்மன் எழுந்தருளியதும், அங்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த காய்கனிகள், தானியங்களை படையலிட்டு, பூசாரிகளும், பொது மக்களும் வழிபட்டனர். அப்போது, பிரம்ம கபாலத்தை, அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆடு, கோழிகள்: மாசி அமாவாசையை ஒட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை, மரவனேரி காக்காயன் சுடுகாடு உள்ளிட்ட, அனைத்து சுடுகாடுகளிலும் நேற்று, மயானக் கொள்ளை விழா நடந்தது. அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் இருந்து, திரளான பக்தர்கள், தாரை, தப்பட்டை முழங்க, காளி, அம்மன் வேடங்களை அணிந்தபடி, சுடுகாடுகளுக்கு வந்தனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. ஆடு, கோழிகளை கடித்தபடியும், கையில் மண்டை ஓடுகளை ஏந்தி, கழுத்தில் ஆட்டுக் குடலை சுற்றியபடியும், பக்தர்கள் ஊர்வலமாக, கோவில்களை நோக்கி சென்றனர். அப்போது, சாலைகள், தெருக்களில் படுத்திருந்த பெண்கள், சிறுமியர், ஆண்களை தாண்டியபடி, பக்தர்கள் ஆசி வழங்கிச் சென்றனர். மாவட்டத்தில் நேற்று மட்டும், 120க்கும் மேற்பட்ட சுடுகாடுகளில், மயானக் கொள்ளை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !