உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை

கடலூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை

கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.

மயானகொள்ளை உற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.கடந்த 1ம் தேதி இரவு இருள கண்டனுடன் அம்மன் வீதியுலா நடந்தது. 2ம் தேதி இரவு பூவாலைகப்பரை, அம்மன் வீதியுலா நடந்தது. 3ம் தேதி அக்னி கரகத்துடன், அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. 4ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முக்கிய நிகழ்வான மயானகொள்ளை உற்சவம் நேற்று (மார்ச்., 6ல்) காலை 11:30 மணியளவில் சுவாமி கோவிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் மயானக் கொள்ளை நடந்தது.

கம்மாபுரம்கோபாலபுரம் அங்காளபரமேஸ்வரி கோவில், மயானகொள்ளை விழாவில், ஏராளமானோர் சாட்டையடி பெற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மாசி மாத தீமிதி திருவிழாயொட்டி, கடந்த 4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி, காலை மாலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு வினாயகர், முருகன், பாவாடைராயர், அங்காளம்மன், காளியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.நேற்று (மார்ச்., 6ல்) காலை 11:00 மணியளவில், மயானகொள்ளை உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சாட்டையடி பெற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக வரும் 11ம் தேதி மாலை 5:00 மணியளவில் தீமிதி திருவிழா நடக்கிறது.

ஸ்ரீமுஷ்ணம் சந்தைத்தோப்பு அங்காளபரமேஸ்வரி பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரிஉற்சவம் கடந்த 4ந் தேதி துவங்கியது. நேற்று மயான கொள்ளை உற்சவம் நடந்தது.இதில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 9 ம் தேதி தீமிதி உற்சவம், 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

நடுவீரப்பட்டுஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. 4ம் தேதி இரவு பூவினால் கப்பறை, இருளன் கப்பறை நடந்து சுவாமி வீதி உலா நடந்தது.5ம் தேதி மாலை 6:00 மணிக்கு குறத்தி வேடமிட்டு குறி சொல்லுதல், வள்ளாலகண்டன் கோட்டை கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 6ல்) மதியம் 3:00 மணிக்கு மயானகொள்ளை திருவிழா நடந்தது. தொடர்ந்து தேரில் அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (மார்ச்., 7ல்) காலை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !