திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :2731 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், இன்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஆலயத்திலிருந்து எழுந்தருளி தேரடி வந்தடைந்தார். வேதமந்திரங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி தேரோட்டம் துவங்கியது. கோவிந்தா கோஷம் முழங்க, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.
ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.