கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் தலை வணங்குகிறேன் என்று குறிப்பிடுகிறார். அவர் யாருக்கு தலை வணங்குவதாக குறிப்பிடுகிறார்?
பகவான் கர்ம யோகத்தையும் ஞான மார்க்கத்தையும் உபதேசிப்பது நான்காவது அத்யாயம். தமது அவதார ரகசியத்தைக் கூறும் பொழுது பக்தர்கள் எவ்விதமெல்லாம் என்னை வணங்குகிறார்களோ நானும் அவர்களை அவ்விதமே அணுகி தரிசனம் கொடுப்பேன் என்கிறார். அதாவது விஷ்ணு வடிவில் வழிபட்டால் விஷ்ணுவாகவும், சிவ வடிவத்தில் வழிபட்டால் சிவபெருமானாகவும், தேவி வடிவத்தில் வழிபட்டால் தேவியாகவும் காட்சியளிக்கிறேன் என்பது அதன் உட்பொருள். யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாம்யஹம் (பகவத்கீதை அத்யாயம்- 4, சுலோகம்-11) என்பது அந்த ஸ்லோகம். பஜாம்யஹம் என்றால் வணங்குகிறேன் என்பது பொதுவான பொருள். ஆனால், இங்கு அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது. பஜாமி என்றால் அணுகுகிறேன் என்றும் பொருள் உண்டு. எனவே நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவ்வுருவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அருள்பாலிக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அவர் தலைவணங்குவதாகப் பொருள் கொள்ளக்கூடாது.