சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம்
அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
இவ்விழா மார்ச் 18 காலை துவங்கியது. அன்று மாலை திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். மார்ச் 19, 20ல் அதே மண்டபத்தில் சுவாமி, தேவியருடன் எழுந்தருளினார்.முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்ஸவம் நேற்று நடந்தது. வண்ணப்பூக்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஊஞ்சல் ஏகாசனத்தில் 11.25 மணிக்கு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க மாலை, மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மாங்கல்யம், மஞ்சள், குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்படட்டன. இன்று (மார்ச் 22) மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்தனர்.