திருவிடைமருதூர் ரிஷிபுரிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
கும்பகோணம்: தஞ்சை ரிஷிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(4ம் தேதி) கோலாகலமாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேலரத வீதியில் ஞானாம்பிகா சமேத ரிஷிபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்தக்கோயில் மிகவும் சிதிலமான நிலையில் பராமரிப்பின்றி இருந்தது. தற்போது கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடந்தது.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது சென்னையை சேர்ந்த திருமதி மகாலட்சுமி சுப்ரமணியன் முயற்சியில் அப்பகுதி மக்களின் துணையோடு தற்போது இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மூலவர் ரிஷிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் ஞானாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.ரிஷபம், சிம்மம், மிதுன ராசிக்காரர்களுக்கும், கவுசிக, பரத்வாஜ, காசிப கோத்திரத்தை சார்ந்தவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.