அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா துவங்கியது
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் (ஏப்., 2ல்) இரவு 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி உறவின்முறை அலுவலகத்திலிருந்து மேள தாளத்துடன் ஊர்வலமாக கொடி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 15 நாட்கள் நடக்கும் விழாவின் தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி அளிப் பார். எட்டாம் நாள் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வர்.
அன்று பக்தர்கள் அக்னி சட்டி ,ஒன்பதாம் நாள் விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவர். கொடியேற்றம்போது அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர், உறவின்முறை செயலர் ராஜமாணிக்கம், அமுதலிங்கேஸ்வர தேவஸ்தான செயலர் கணேசன், பொருட்காட்சி செயலர் சங்கரசேகரன், எஸ்.பி.கே., ஆண்கள் பள்ளி செயலர் காசிமுருகன், உறவின்முறை உதவி தலைவர் சுரேஷ், அம்பலகாரர் பிரேம்குமார், எஸ்.பி.கே., பெண்கள் பள்ளி செயலர் கனகராஜ், துவக்க பள்ளி செயலர் சரவணன், இன்டர் நேஷனல் பள்ளி செயலர் ராஜேஸ்குமார், தியாகராஜன் நினைவு மருத்துவமனை செயலர் பிரசாத், பொருட்காட்சி உதவி தலைவர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர்.