உத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED :2404 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப்பெருவிழா நேற்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
நந்தி, கொடிமரம், பலிபீடம் உள்ளிட்டவைகளுக்கு 11 வகையான அபிஷேகம், 9 வகையான சோடஷ தீபாராதனைகளும் நடந்தது. கோயில் ஸ்தானிக குருக்களால் கொடிப்பட்டம் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மனுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியம் முழங்க சிவபுராணம் பாடப்பட்டது. தொடர்ந்து ஏப்.,20 வரை பல்வேறு வாகனங்களில் உள் மற்றும் வெளிப்பிரகார வீதியுலா நடக்கிறது. ஏப்., 18 (வியாழன்) அன்று மாலை5:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கும். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.