உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபிரான் சென்ற வழி

ராமபிரான் சென்ற வழி

ராமபிரான், சீதை, லட்சுமணனுடன் வனவாசம் மேற்கொண்டபோது இலங்கை வேந்தன் இராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச்சென்றான். சீதையைத் தேடி லட்சுமணனுடன் வனத்தில் அலைந்த ராமபிரான், முடிகொண்டான் என்ற இடத்தில் சர்வமுக்தி விநாயகரை வழிபட்டு ‘தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றியடைய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த விநாயகர் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முடிகொண்டான் கிராமத்தில் அருள்புரிகிறார். அதற்குப்பின் சீதையைத் தேடி அலைந்த ராமனுக்கு வனத்தில் அனுமனின் நட்பு கிடைத்தது. கடல் கடந்து இலங்கை சென்ற அனுமன் அங்கு அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்துவந்து செய்தி சொன்னான். இலங்கைமீது போர்தொடுக்க முடிவு செய்த ராமபிரான் முதலில் ‘ஆதி’ எனப்படும் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு வந்தார். அங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் பெருமானை வழிபட்டு ஆசிபெற்றார். இதனால், அந்த விநாயகருக்கு ‘இலக்கு அறிவித்த விநாயகர்’ என்று பெயர். கோடியக்கரையிலிருந்து இலங்கை செல்வது எளிது என்பதால் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார்.

வங்கக்கடலை எப்படிக் கடக்கலாம் என்று திட்டமிடுவதற்காக அங்கிருந்த உயர்ந்த மணல் மேட்டின்மீது ஏறிநின்று பார்த்தார். அப்போது, இராவணனது அரண்மனையின் பின்புறம் அவர் கண்களுக்குத் தென்பட்டது. ‘பின்புற வாயிலை நோக்கிச் செல்வது வீரனுக்கு அழகல்ல ; எதிரியை முதுகில் குத்துவதற்குச் சமமானது ’ என்றெண்ணிய ராமபிரான் அரண்மனையின் முன்பக்கமாகவே செல்ல விரும்பினார். அதன்பின்னரே ஆதிசேதுவை ராமர் (ராமேஸ்வரம் பகுதி) தேர்ந்தெடுத்தார் என்று ராமாயணம் கூறுகிறது. கோடியக்கரையில் ராமர் நின்று இலங்கையைப் பார்த்த இடத்தில், அந்தச் சம்பவத்தின் நினைவாக அழகிய மண்டபம் ஒன்றைக் கட்டி, அதில் ராமர் பாதத்தையும் நிறுவியிருக்கிறார்கள். இங்கு வருபவர்கள் இதை தரிசிக்கத் தவறுவதில்லை. தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் கடலில் நீராட வரும் பக்தர்கள் ராமர் பாதத்தைத் தரிசிப்பது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !