உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா

கொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர்: ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா... அரோகரா கோஷம் விண்ணை முட்ட, திருப்பூர், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீகந்தப்பெருமான் கோவில் உள்ளது. பவுர்ணமியில், மலையை கிரிவலம் வர, கிரிவல பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சித்தர்கள் வாழ்ந்த தலமாகக் கருதப்படும் இக்கோவிலில், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புதிதாக ஐந்துநிலை ராஜகோபுரம் நிறுவப்பட்டுள்ளது. மூலவர், கன்னி மூலை விநாயகர், வாயு மூலை பெருமாள், தேவியருடன் நவகிரகங்கள் சன்னதிகள் பொலிவுபடுத்தப்பட்டன.மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

முன்னதாக கடந்த 18ம் தேதி கணபதி வழிபாட்டுடன், யாகபூஜை துவங்கியது; 19ம் தேதி முதல் கால வேள்விபூஜையில் துவங்கி, நேற்று முன்தினம் மாலை, ஐந்தாம்கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆறாம்கால யாகபூஜைகளும், மஹா பூர்ணாஹூதி எனும் நிறைவேள்வி வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து, புனித தீர்த்தம் வைத்திருந்த கலசங்கள், மங்கள வாத்திய இசையுடன், யாகசாலையில் இருந்து புறப்பட்டன. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் பச்சைக்கொடி அசைக்க, 9:40 மணிக்கு, சிவாச்சார்யர்கள் கலசங்களில் புனித நீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா... அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளைத் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, துணைத்தலைவர் ராஜாமணி, செயலாளர் கணஷே், பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மூலவர் விமானம், ஐந்து நிலை ராஜ கோபுரம், கன்னிமூலை கணபதி, விநாயகப்பெருமாள், பெருமாள் சன்னதிகள், மணி மண்டபம் என, ஏககாலத்தில் கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகமும், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், தசதரிசன காட்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு இயந்திரம் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.பக்தர்களுக்கு, காலை முதல் பிரேமா பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீகந்தப்பெருமான் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து திருவீதியுலாவும் நடந்தது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, இன்று முதல், 48 நாட்களுக்கு, காலை, 10:30 முதல், 1:00 மணி வரை, மண்டல பூஜைகள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !