உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோலாகலம்! மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

உடுமலை கோலாகலம்! மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக, குட்டைத்திடலில் திருவிழா கடைகள், பொழுது போக்கு அம்சங்களால் களை கட்டியுள்ளது.உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 9ம்தேதி, பூச்சொரிதல் மற்றும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து, கம்பம் நடுதல் திருவிழா, கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காமதேனு, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்கள் என தினமும், அம்மன் வாகனங் களில் எழுந்தருளி, திருவீதி உலா நடக்கிறது.கடந்த, 19ம் தேதி முதல், கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூவோடு எடுத்து வந்து, சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.

இன்று (ஏப்., 23ல்), இரவு, 10:00 மணிக்கு, பூவோடு நிறைவு பெறுகிறது.நாளை (ஏப்., 24ல்) அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 4:00 மணிக்கு, சுவாமி திருக் கல்யாணமும் நடக்கிறது. வரும், 25ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது.அன்று காலை, 6:45 மணிக்கு, மாரியம்மன் சுவாமியுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:15 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் துவங்கி, தேர் வீதிகளில் திருத்தேரோட்டம் நடக்கிறது.

வரும் 26ம் தேதி, காலை, 8:00க்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, அம்மன் மூல மந்திர திரிசதி அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 10:00க்கு வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.தேர்த்திருவிழாவில், பிரதானமான திருவிழா கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது. களை கட்டிய குட்டைத் திடல் இதற்காக, குட்டைத்திடலில், உணவுப்பொருட்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், அழகுசாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என, 300க்கும் மேற்பட்ட திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராட்சத ராட்டினங்கள், தூரி, ரயில், கப்-அன் சாசர் என சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி அமைப்புகளால் குட்டைத் திடல் கோலாகலமாக காணப்படுகிறது.கோடை விடுமுறையில் தேர்த்திருவிழா துவங்கி நடந்து வருவதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அதே போல், குட்டைத்திடலுக்கும் பொதுமக்கள் ஏராளமாக வருவதால், அங்கு, திருவிழா கடைகள், மக்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.அபரிமிதமான கட்டணம் ; அலறும் மக்கள் தேர்த்திருவிழாவிற்காக குட்டைத்திடலில் அமைக்கப்பட்டுள்ள, ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு, அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள் குறைந்தளவு கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், தேர்த் திருவிழாவில், ஏறத்தாழ, மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு மற்றும் குடிநீர், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாக்கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாக விற்பதை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !