அன்னூரில் இன்பம் துன்பம் ஒன்றாக பாவிக்க வேண்டும்; தமிழ் சொற்பொழிவில் தகவல்
அன்னூர்: அன்னூரில் தமிழ் சங்கம் சார்பில், ஒவ்வொரு மாதமும், அன்னூர், சுப்பையா நகரில், சொற்பொழிவு நடக்கிறது. இம்மாத நிகழ்வு, சங்க தலைவர் நடராஜன் தலைமையில் நேற்று முன் தினம் 23ல், நடந்தது. காலையில் திருவாசகம் வாசிக்கப்பட்டது. பொன்னுச்சாமி வரவேற்றார்.
புலவர் ராமதாஸ் பேசுகையில்,ஜென் தத்துவம் இந்தியாவில் தோன்றி ஜப்பான் சென்று பிரபலமாகியது. இன்பம், துன்பம் என இரண்டையும் ஒரே விதமாக பாவிக்கும் மன பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் வந்தால் எந்த பிரச்னையையும் சமாளிக்கலாம். திருக்குறளையும், திருமூலரின் பாடல்களையும் வாசித்து, பின்பற்றினால், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தீ வளர்க்கும் வேள்வியில் குறிப்பிட்ட மொழியில் ஓதினால் தான் பலன் என்பது இல்லை. தீ வளர்த்து தமிழில் உள்ள நல்ல வாக்குகளை ஓதினாலும் பலன் உண்டு என திருமூலர் கூறியுள்ளார், என்றார். செயலாளர் அன்னாசிகுட்டி நன்றி கூறினார். திரளானோர் பங்கேற்றனர்.