உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நீரை தேடி அலையும் மான்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நீரை தேடி அலையும் மான்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், மான்கள் கூட்டம் குடிநீரை தேடி அலைகின்றன.

திருவண்ணாமலையில் உள்ள, 2,668 அடி உயரமுள்ள மலையில், 14 கி.மீ., சுற்றளவுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வனப்பகுதி உள்ளது. இங்கு மான், முயல், கரடி, காட் டெருமை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள், 70க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் உள்ளன. மான்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. தற்போது, கடும் வறட்சியால் மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் குடிநீரின்றி, மக்கள் நடமாட்டமுள்ள கிரிவலப்பாதையை நோக்கி மான்கள் வருகின்றன. வனத்துறை சார்பில், கிரிவலப்பாதையில் நீர் தொட்டி அமைத்து, குடிநீர் தினமும் நிரப்புவது வழக்கம். தற்போது தொட்டியில் நீரை சரிவர நிரப்புவது இல்லை. இதனால், மான்கள் சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. சில மான்கள் நாய்களிடம் சிக்குவதும், வாகனங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாவதுமாக உள்ளன. இதை தடுக்க, கிரிவலப்பாதையில் உள்ள நீர்தொட்டியில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !