உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமபாளையத்தில் திருத்தேரோட்டம்

உத்தமபாளையத்தில் திருத்தேரோட்டம்

உத்தமபாளையம் :உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயில் திருத் தேரோட்டம் மும் மதத்தினரும் பங்கேற்று மத நல்லிணக்கத்துடன் நடந்தது. தென்காளஹஸ்தி எனப்படும் திருக்காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக தேர்த்திருவிழா பிப். 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது. நேற்று முன்தினம் சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம்நடந்தது.

திருத்தேர்:நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்மன் ரதம் ஏறுதல் நடந்தது. சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது. தேரோட்டத்தில் மும் மதத்தினரும் வடம் பிடித்தனர். கலெக்டர் பழனிச்சாமி, எஸ்.பி., பிரவீண்குமார் அபினவு தலைமையில் உத்தமபாளையம் ஜமாத் முத்தவல்லி தர்வேஷ் முகையதீன் மற்றும் ஜமாத்தார்கள், புனித அந்தோணியார் சிற்றாலய பொறுப்பாளர் தர்மராஜ் மற்றும் கிறிஸ்தவர்கள், பி.டி.ஆர்., பண்ணை விஜய தியாகராஜன், அனைத்து சமுகத்தினர், அதன் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு துவங்கிய தேரோட்டம் மாலை 4 மணிக்கு நிலையை அடைந்தது. கோயில் தலைமை அர்ச்சகர் நீலகண்ட சிவாச்சாரியார், அர்ச்சகர் ஏகாம்பரம் சிறப்பு பூஜைகள் செய்தனர். அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ராஜா மற்றும் அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !