கருங்காலக்குடியில் புதையுண்ட சிவன் கோயிலில் மனித எலும்புக் கூடுகள்
கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் பெரிய தீர்த்தனம் கண்மாயில் புதையுண்ட சிவன் கோயில் அருகே மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கு பழமையான பெரிய, சிறிய தீர்த்தனம் என இரு கண்மாய்கள் உள்ளன. இவை காலப்போக்கில் ஒரே கண்மாயாக மாறின.
இதை ஆழப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டது. அதில் இருந்து 3 அடி உயர சிவலிங்கம், ஒன்றரை அடி உயர நந்தி, சுவாமி வாகன கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் சிவலிங்கம், மந்தையில் உள்ள பிள்ளையார் கோயிலில் கிராம மக்களால் வழிபடப்படுகிறது.
இங்கு 600 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயில் இருந்திருக்கலாம் என கிராமத்தினர் கருதுகின்றனர். சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் கண்மாய் நடுப்
பகுதி விநாயகர் கோயில் அருகே மற்றும் கரையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் மனித எலும்பு கூடுகள் இருந்தன. மேலும் தோண்டதோண்ட சில எலும்பு கூடுகள் கிடைத்தன.
இதுகுறித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராஜரத்தினம் கூறியதாவது: கண்மாயை ஆழப்படுத்தும் போது 600 ஆண்டுகளுக்கு முந்தைய புதையுண்ட சிவன் கோயில் சுவாமி சிலைகள் மற்றும் கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது மனித எலும்பு கூடுகள் உள்ளன. சிவன் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த பக்தர்களை குழி தோண்டி புதைத்தாக கருத்து நிலவுகிறது. இதுகுறித்த ஓலைச்சுவடிகள் இருப்பதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும், என்றார்.