காலையில் யாகம்; மாலையில் மழை! அவிநாசியில் பக்தர்கள் பரவசம்
அவிநாசி;அவிநாசி கோவிலில், காலையில், மழைப்பதிகம் பாடி பாராயணம் செய்யப்பட்டது. அதற்கு மனமிறங்கிய வருண பகவான் மாலையில், மழை பொழிந்தார். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி ஸ்ரீ வருண யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ஸ்ரீ விகாரி தமிழ் ஆண்டில் மாநிலம் முழுக்க பருவமழை பெய்யவும், கோடைக்கு பிறகு, வசந்தம் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவிலில்களில், சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஸ்ரீ வருணஜப யாகம், நேற்று அவிநாசியில் உள்ள கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. அதில், நந்தியம்பெருமானுக்கு புனித நீர் அபிேஷகம் நடைபெற்றது.அதன்பின், கோவில் சிவாச்சாரியார்கள், பர்ஜன்ய சாந்தி வருணஜப வேள்வி நடத்தினர். இதில் பஞ்ச வாத்தியங்கள் முழங்க அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்தபைரவி ராகங்கள் இசைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, சிவாச்சாரியார்கள், தெப்பகுளத்துக்கு பூஜை செய்தனர். ஓதுவாமூர்த்திகள், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற மழைப்பதிகங்களை பாராயணம் செய்தனர். சிவாச்சாரியார்கள், தெப்பக்குளத்தில் இறங்கி, கழுத்தளவு நீரில் நின்றபடி பாராயணம் செய்தனர். அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.காலையில், மழைப்பதிகம் பாடி, வருணஜபம் நடந்த நிலையில், மாலையில், 5:45 மணியளவில், அவிநாசி வட்டாரத்தில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக, தெக்கலுார், புதுப்பாளையம் பகுதியில், நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழைப்பதிகம் பாடியதில், வந்த மழையை பார்த்து, அவிநாசி வட்டார பொதுமக்களும், விவசாயிகளும் மனங்குளிர்ந்தனர்.