பெருந்துறை ஸ்ரீதேவி அம்மன் கோவில் தேர்த்திருவிழா: அறக்கட்டளையினர் நடத்த தாசில்தார் உத்தரவு
பெருந்துறை: காஞ்சிக்கோவில், ஸ்ரீதேவி அம்மன் கோவில் தேர்த்திருவிழாவை, இந்தாண்டும் ஸ்ரீதேவி அம்மன் நல அறக்கட்டளையினர் நடத்த, நேற்று (மே., 7ல்) தாசில்தார் அலுவலக த்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவில் ஸ்ரீதேவி அம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும்.
ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்தாண்டு விழா நாளை தொடங்கி, 26ல் நிறைவு பெறுகிறது. இந்தாண்டு குண்டம், தேர்த்திருவிழாவை யார் நடத்துவது என, இரு கோஷ்டியினரும் மோதும் சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, நேற்று (மே., 7ல்) பெருந்துறை தாசில்தார் துரைசாமி முன்னிலையில் இரு தரப்பினரும் கலந்து கொண்ட அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதில், காஞ்சிக்கோவில் ஸ்ரீ தேவிஅம்மன் நல அறக்கட்டளையினர் இந்தாண்டு பொங்கல் திருவிழாவை, செயல் அலுவலருடன் இணைந்து நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.