திருப்பூரில் வைகாசி விசாக தேர்த்திருவிழா
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 12ல் துவங்கி, 24 ம் தேதி வரை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.ஸ்ரீவிசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி, பூமிநீளாதேவி, கனகல்லி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 18, 19 ம் தேதிகளில் நடக்கிறது.
வரும், 12ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வாகன காட்சி சிறப்பு வழிபாடும் நடைபெறும்.
வரும், 18 ல் விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 19 ல், வீரராகவப்பெருமாள் தேரோட்ட மும் நடைபெறுகிறது.வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவில், இதுவரை இல்லாத வகையில், புராண நாடக நிகழ்ச்சிகளுடன், 13 நாட்களும், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், கலை நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கப் படுகிறது.
தினமும், மாலை, 6:00 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் துவங்கும். வரும், 12ம் தேதி, நவகான பஜன மண்டலி குழுவினரின், மனமகிழ் பக்தி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 13ல், கலைமகன் குழுவினரின் ஹரியும் ஹரனும் சரணம் என்ற வில்லுப்பாட்டு; வரும் 15ல், பாண்டிச்சேரி சம்பந்தம் குருக்கள் தலைமையிலான குழுவினரின், தேவார திருமுறை மற்றும் திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சி; 15ல், தமிழரசன் தியேட்டர்ஸ் பாலசுந்தரம் வழங்கும், தெய்வ சேக்கிழார் புராண நாடகம்; 16ல், ஆயக்குடி அனந்தகிருஷ்ணன் பாகவர் குழுவின், பஜனை; 17 ல் பாலசுந்தரம் குழுவினரின், பக்த பிரஹலாதன் புராண நாடகம்;
தொடர்ந்து, 18 ம் தேதி, சந்தியா சங்கர் தலைமையிலான சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடத்தின் நாட்டிய நிகழ்ச்சி; 19 ல் கணேஷ்குமார் நாம சங்கீர்த்தனம்; 20ல் திருப்பூர் கவிநயா நாட்டியாலயா நாட்டிய பள்ளியின் அறுபடை வீடு- நாட்டிய நாடகம்;வரும், 21 ல் தமிழரசன் தியேட்டர்ஸ் கார்த்திக் ஞானேஸ்வர் குழுவின், நாம சங்கீர்த்தனம்; 22ம் தேதி, கோவை உமா மகேஸ்வரி தலைமையிலான சிவசக்தி பட்டிமன்ற குழவின், இன்னிசை பட்டிமன்றம்; 23ம் தேதி, திருப்பூர் ராமகிருஷ்ணன் குழுவினரின், ஸ்ரீசீதா கல்யாண வைபவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
தேர்த்திருவிழா நிறைவாக, 24ம் தேதி, தமிழக தமிழாசிரியர் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில், பக்தி மார்க்கம் மக்கள் வாழ்வை சீர்படுத்துகிறதா? சிரமப்படுத்துகிறதா? என்ற விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.