வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம் துவக்கம்
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று (மே., 10ல்) தேரோட்டம் துவங்குகிறது.சிறப்பு வாய்ந்த இக்கோயில் சித்திரை திருவிழாவுக்காக ஏப். 17 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. மே 7 ம் தேதி திருவிழா துவங்கியது. அம்மன் மலர் விமானத்திலும், முத்துப் பல்லக்கு, புஷ்ப பல்லக்கு என ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் உலா வந்தும் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் பாலித்தார். தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பகலில் வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் அதிகாலை முதல் பகல் 11:00 மணிவரையும், மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் வருகையும் அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் நிகழ்ச்சி, வேடிக்கை, பொழுது போக்கு என திருவிழா களைகட்டியுள்ளது.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (மே., 10ல்) அம்மன் தேருக்கு எழுந்தருளுகிறார். தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மாலையில் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. கலெக்டர் பல்லவி பல்தேவ், பாஸ்கரன் எஸ்.பி., மற்றும் பக்தர்கள் தேரை இழுத்து துவக்கி வைப்பார்கள். அதனை தொடர்ந்து தேர் ரத வீதியில் வலம் வந்து 13 ம்தேதி நிலைக்கு திரும்பும். தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் திரள்வர்.