விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா துவக்கம்
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் பக்தர்களின் ஓம் நமசிவாயா கோஷம், மேளவாத்தியம் முழுங்க கொடியேற்றம் நடந்தது. திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்ற சிறப்பு பூஜைகள், நேற்று நடந்தன.விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், விநாயகர் பூஜையை அடுத்து காப்பு கட்டுதல், சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது.
அப்போது, சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழுங்க சிறப்பு யாக பூஜை, அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களின் ஓம் நமசிவாய கோஷம், மேளவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.அதன்பின் விஸ்வேஸ்வர சுவாமி கற்பக விருட்சம் வாகனத்திலும், விசாலாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், சிறப்பு யாக பூஜைமற்றும் அபிேஷகத்துடன் கொடியேற்றம் நடந்தது. பூமி நீளா தேவி தாயார், கனகவல்லிதாயார் சமேத வீரராகவப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், இன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடக்க உள்ளது.தவிர, வரும், 24ம் தேதி வரை, தினமும், மாலை, 6:00 மணிக்கு, பெருமாள் கோவிலில், கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.