திருப்பத்தூரில் கழுவேற்ற நடுகல் கண்டெடுப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கழுவேற்ற நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி
கூறியதாவது: திருப்பத்தூர் சக்தி நகர் ஏழாவது தெருவில், தீப்பாஞ்சியம்மன் கோவிலில் தொல்பொருள் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கோவில் வெளியே மூன்று அடி உயரமும், இரண்டு அடி அகலம் கொண்ட கழுவேற்ற நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
கழுவேற்றம் என்பது ஆசன வாயில் கூரிய மரக் கழுனை ஏற்றிக் கொல்லும் தண்டனை யாகும். பல்லவர் காலத்தை சேர்ந்த இந்த நடுகல் கி.பி., ஏழாம் நூற்றாண்டில், சமய பூசல் காரணமாக, இது போன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடுகலில் உள்ள, முகம் மற்றும் மூக்கு பகுதிகள் சிதைந்துள்ளன. வலது கை அருள் பாலிக்கும் தன்மையோடும், இடதுகை இடது தொடையில் வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. இடது கையும் சிதைந்த நிலையில் காணப்படும் இது போன்ற பழமையான கழுவேற்ற நடுகல்லை, தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.