கூடலூர் திருவிழா நாளில் மட்டும் கட்டண விலக்கு:மாசி கோவில் பக்தர்கள் கோரிக்கை
கூடலூர்:ஆனைகட்டி மாசி கோவில் திருவிழாவின் போது மட்டும், கோவிலுக்கு சென்று வர, பக்தர்களுக்கு சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதுமலை, ஆனைக்கட்டி வனப்பகுதியில் பழமையான மாசி கரியபண்ட அய்யன் கோவில் உள்ளது.
இந்த திருவிழா கடந்த, 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் நடந்தது. விழாவில், நீலகரி மட்டு மின்றி சத்தியமங்களம், ஈரோடு மற்றும் கர்நாடக குண்டல்பேட் பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விழா நாட்களில், வாழை தோட்டம் வன சோதனை சாவடியில், கோவிலுக்கு செல்லும் வாகனத்துக்கு, 50 ரூபாய், பக்தர் ஒருவருக்கு, 30 ரூபாய் வீதம், நுழைவு கட்டணம் வசூல் செய்து அனுமதித்தனர். இதனால், பல பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.பக்தர்கள் கூறுகையில், திருவிழாவின் போது, கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மட்டும், நுழைவு கட்டணம் வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,அரசு உத்தரவுபடி, இப்பகுதிக்கு செல்பவர்களிடம் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப் பட்டுள்ளது. திருவிழாவின் போது, பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்கள், கோவில் கமிட்டியிடம் நுழைவு கட்டணம் வசூல் செய்யவில்லை. இது குறித்து ஆய்வு செய்யப்படும், என்றனர்.