வைகாசி விசாக திருவிழா: தீர்த்தவாரி உற்சவத்தில் திருமஞ்சனம் கண்ட பெருமாள்
சேலம்: அழகிரிநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில், தொட்டியில் பெருமாள் இறங்கி திருமஞ்சனம் கண்டருளினார்.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 முதல், 18 வரை தினமும் வெள்ளி பல்லக்கு, அன்னம், சிங்கம், அனுமந்த, யானை, கருட மற்றும் சேஷ வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 15, திருக்கல்யாணம், மாலை கருடசேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. நேற்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதற்காக புனிதநீரை பல்லக்கில் வைத்து, மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து, நந்தவனத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டியில், ஸ்ரீ சக்ர வடிவில் உள்ள பெருமாள், பட்டாச்சாரியார்களுடன் மூழ்கி தீர்த்தவாரி கண்டருளினார். இன்று இரவு பல வண்ண மலர் அலங்கார சப்பரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் எழுந்தருளி திருவீதி உலா வரும் சப்தாவரணம் நடக்கிறது. நாளை மாலை, வசந்த உற்சவத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், சுதர்சன், ஸ்ரீராமன், கவுதம் பட்டாச்சாரியார்கள் மற்றும் கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.