ஏற்காடு வைகாசி தேரோட்டத்தில் மழையால் பக்தர்கள் மகிழ்ச்சி
ஏற்காடு: சேர்வராயன் கோவில் தேரோட்டத்தின்போது, சாரல் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஏற்காடு, சேர்வராயன் கோவிலில், வைகாசி திருவிழா தேரோட்டம், நேற்று (மே., 21ல்) நடந்தது. சேர்வராயன் - காவிரியம்மாள் சுவாமி சிலைகளை, தேரில் எழுந்தருளச் செய்தனர். மதியம், 2:00 மணிக்கு தொடங்கிய தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், வடம்பிடித்து இழுத்து, கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். 3:30 மணிக்கு, தேரோட்டம் நிறைவடைந்தது.
தேரோட்டத்தின்போது, சூரை தேங்காய், சில்லரை காசுகள், காப்பி கொட்டை, மிளகு, கல் உப்பு ஆகியவற்றை, பலர் தூவினர். மேலும், சுவாமி சிலையை இறக்கும் முன், மழை பெய்வது ஐதீகம் என்பது மக்கள் நம்பிக்கை. அதன்படி, மதியம், 3:00 மணிக்கு, 15 நிமிடம் சாரல் மழை பெய்ததால், நடப்பாண்டு மழைப்பொழிவு, விவசாயம் நல்லபடியாக இருக்கும் என, மக்கள் தெரிவித்தனர்.
ஆடு பலியிட்டு வழிபாடு: ஆட்டையாம்பட்டி, சடை முனியப்பன் கோவில் திருவிழாவை யொட்டி, நேற்று (மே., 21ல்) காலை, முப்பூஜை நடந்தது. அதில், கோவில் வளாகத்திலுள்ள, பெரியாண்டிச்சி அம்மனுக்கு, மஞ்சள் குங்குமம், சந்தனம் புதுப்புடவை சார்த்தி, சிறப்பு அலங்காரம் செய்தனர். மதியம், சடை முனியப்பனுக்கு பால், தயிர், மோர், இளநீர், கரும்புச்சாறு உள்பட, 12 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
குழந்தை வரம் கேட்டு வேண்டிய தம்பதி, முனியப்பனுக்கு, துலாபாரம் கட்டி தங்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயத்தை, காணிக்கையாக செலுத்தினர். பலர், மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றினர். பின், திரளான பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, தரிசனம் செய்தனர். அதேபோல், வீரபாண்டி அருகே, பாலம்பட்டி, ஊஞ்சக்காட்டிலுள்ள, செல்லாண்டி அம்மன், வீரக்காரன் கோவில் திருவிழா நேற்று (மே., 21ல்) நடந்தது. அதையொட்டி, திரளான பக்தர்கள், முனியப்பனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர்.