மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவ வசதி
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவ முகாமிற்கு எத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதற்குரிய ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.காரைக்குடி மீனாட்சிபுரம் வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு:மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். மதுரை வில்லாபுரம் மகேஸ்வரி 62 மே 17 ல் கோயிலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கோயில் வளாகத்தில் அவசர உதவிக்கு மருத்துவ வசதி இல்லை. அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
முதுநிலை மருத்துவ அலுவலரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும் என கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.ஹேமலதா அமர்வு: மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அறக்கட்டளை சார்பில் நிரந்தர மருத்துவ முகாம் அமைக்க விரும்புவதாக அதன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அதை கோயில் நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். கோயிலில் விழாக்காலங்கள் மற்றும் இதர நாட்களில் மருத்துவ முகாமிற்கு எத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதற்குரிய ஆவணங்களை ஜூன் 4 ல் அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.