அருணாசலேஸ்வரர் கோவிலில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு நடைமுறை, நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும், பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் ராஜகோபுரம் (கிழக்கு), அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு), திருமஞ்சன கோபுரம் (தெற்கு) ஆகிய மூன்று கோபுரங்கள் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். பே கோபுரம் (மேற்கு) வழியில், பவுர்ணமி மற்றும் தீப திருவிழா நாட்களில் மட்டும் பக்தர்கள் வெளியே செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்கு, இதுவரை கோபுர நுழைவு வாயிலில் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தும், கிளி கோபுரம் நுழைவு வாயிலில், பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை ஸ்கேன் செய்தும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், பே கோபுரம் (மேற்கு) தவிர்த்து, மற்ற மூன்று கோபுரங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே கோவிலினுள், 30க்கும் மேற்பட்ட இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி நடக்கிறது.