உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழவந்தி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

வாழவந்தி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

மோகனூர்: மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் இறங்கும் விழாவில், ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும், தேர்த் திருவிழா விமரிசையாக கொண்டப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 14ல் துவங்கியது. தினமும் காவிரிக்கு சென்ற பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி, சுவாமியை வழிபட்டு சென்றனர். காலை, மாலை, சிறப்பு அபி ஷேகம், சுவாமி திருவீதி உலா நடந்தது. 20ல் மறுகாப்பு, நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, குண்டம் ஏற்படுத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு புனித நீராடி, ஐந்து கி.மீ,. தூரம் நடந்து வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து, அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு, வாணவேடிக்கை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கிடாவெட்டு, பொங்கல் பூஜை; மாலை, 4:00 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !