வாழப்பாடி பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
வாழப்பாடி: வாழப்பாடி, அக்ரஹாரம், சென்றாய பெருமாள் கோவிலில், வரும், 8ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜூன் 1ல்), கொடியேற்றுதல், பூச்சாட்டுதல் உற்சவம் நடந்தது.
மாலை, சுவாமி சக்தி அழைத்தலுக்கு பின், கோவில் காளையை அலங்கரித்து, ஊர்வலமாக, கோவில் வளாகத்துக்கு, மேள, தாளத்துடன் அழைத்து வந்தனர்.
பின், கொடிமரத்தில் கொடியேற்றம், பூச்சாட்டுதல், காப்பு காட்டுதல், திருக்கோடிதீபமேற்றுதல் நடந்தது. இரவு, 8:30 மணிக்குமேல், 200 கிலோ அளவுக்கு, மொச்சைக்கொட்டை அவித்து, கொடிமரம் முன் வைத்து பூஜை செய்த பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, மூலவர் சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். வரும், 7ல், திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா, 8ல், ஊரணி
பொங்கல், தேரோட்டம், 9ல் சத்தா பரணம், 10ல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடையும்.