உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் இந்த ஷ்யாம் பர்பரீகா!

யார் இந்த ஷ்யாம் பர்பரீகா!

கிருஷ்ணர் அறிவுரைப்படி மகா பாரதப் போரில் களப் பலியானவர்கள் இருவர். அவ்விருவருமே பாண்டவர் குல வாரிசுகள்! ஒருவன், அர்ஜுனன் -நாக வம்ச இளவரசி உலூபியின் மகனான அரவான். மற்றவன், கடோத்கஜன் - மவுர்வியின் புத்திரன் பர்பரீகன்! இதில் பர்பரீகனின் நினைவைப் போற்றும் விதமாகவே காடூ ஷ்யாம்ஜியின் தல புராணம் அமைகிறது.

இந்த ஒப்பற்ற வீரனைப் கொண்டாடும் விதமாக ஃபால்குன மாதம் (நமக்கு மாசி) வளர்பிறை சுத்த ஏகாதசி - துவாதசி தினத்தன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், சீகர் டவுன் காடூ (கடாக் என் பதன் திரிபு) எனுமிடத்திலுள்ள பர்பரீகன் கோயிலில் விழாவும் அதையடுத்து, பிரபலமான "மேளாவும் வெகு விமரிசையாக நடந்தேறுகின்றன.

பர்பரீகன் கடுமையாகத் தவமியற்றி பரமேஸ்வரரிடமிருந்து இலக்கைத் துல்லியமாகக் கணிக்கும் இணையில்லா மூன்று அம்புகளைப் பெற்றான்.
அக்னி தேவன் மூவுலகையும் வென்று வெற்றி வாகைச் சூடக்கூடிய ஓர் தனுசை அவனுக்களித்தான். கிருஷ்ணரை தனது மானசீகக் குருவாக ஏற்று, அவரிடமும் சிட்சைப் பெற்றான்.

அவனது முதல் அம்பு அழிக்கவேண்டிய இலக்குகளைக் குறிப்பெடுத்துவிட்டு அவனிடமே திரும்பி விடும். இரண்டாவது பாணம் யாரையெல்லாம் காப்பாற்ற வேண்டுமோ அவர்களை அடையாளமிட்டுத் திரும்பும். மூன்றாவது அம்பு குறியிடாதவர்களை அழித்துவிட்டுத் திரும்பும். அதாவது, அவன் லட்சியம் ஈடேற இரு கணைகளே போதும்! ஆதலால், போர்க்களத்தில் அவனொருவனே வெற்றி வீரனாகத் திகழ்வான்.

அதேசமயம், தனது தாயாரிடம் ஒரு வாக்குறுதியையும் அளித்திருந்தான். அதன் பின்விளைவுகளை அறியாமலேயே! போர்க்களத்தில் எந்தப் பக்கத்து சேனை வலுவிழந்து நிற்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்துப் போரிட வேண்டும் என்பது தாயார் மவுர்வியின் கட்டளை. அதன்படி பார்த்தால், இருபுறமும் நின்று போரிட வேண்டியக் கட்டாயம் ஏற்படும்! முடிவில்
போர்க்களத்தில் அவன் ஒருவனே மிஞ்சியிருந்து, வெற்றி வீரனாகத் திகழும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்!

கவுரவச் சேனையைவிட பாண்டவர்களின் படைப்பலம் குறைவாகவே இருந்ததால், பர்பரீக் பாண்டவர்கள் பக்கம் இருக்கவே தீர்மானித்தான். அவன் பலமே அவர்களுக்குப் பலவீனமாகி விடும்! கவுரவர்களுக்கும் அதே நிலைதான். பாண்டவர்களைக் காப்பாற்ற விழைந்த கிருஷ்ணர், அவனை மடக்க ஒரு யோசனை செய்தார்.

ஓர் அந்தணர் வேடத்தில் அவன் முன் தோன்றியவர், "மூன்று அம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு போர்க்களத்தில் எதைச் சாதித்துவிட முடியும்? என்று பரிகசிக்க, அவனோ அதைச் செயலில் காட்டுவதாகக் கூறினான். பர்பரீக்கையும் அவனது மூன்று கணைகளையும் சோதிக்க எண்ணியவர், அவனை ஒரு அரச மரத்தின் அருகே அழைத்துச் சென்று அதன் இலைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கட்டச் சொன்னார். சவாலை ஏற்றுக்கொண்ட பர்பரீக், வில்லில் நாண் ஏற்றி அம்பை ஏவுமுன் சில வினாடிகள் கண் மூடித் தியானித்தான். இத்தருணத்தையே எதிர்நோக்கிய மாயக் கண்ணன், மரத்திலிருந்து ஒரே ஒரு இலையைப் பறித்துத் தனது இடது பாதத்தின் கீழே மறைத்து வைத்துக்கொண்டார். பர்பரீக்கின் முதல் அம்பு மரத்திலுள்ள எல்லா இலைகளையும் கோர்த்துக்கொண்டு, முடிவில் அந்தணரின் பாதங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.

ஏதுமறியாதவர் போல், ""ஏன்... இப்படி? என்று அந்தணர் வினவ, ""பாதத்தின் கீழே இலை ஒன்று இருக்கிறது. அதைக் குறியிடாமல் அம்பு திரும்பாது என்று பர்பரீக் கூற, அவரும் தனது பாதத்தைச் சற்றுத் தூக்கினார். அம்பும் கிருஷ்ணரின் காலில் ஊடேறிச் சென்று இலையைக் குறியிட்டது! அடுத்த அம்பு எல்லா இலைகளையும் கட்டாகக் கட்டிவிட்டது. அதனாலேயே கிருஷ்ணரின் இடது பாதம் பலவீனமாகி, அவரது மறைவுக்கும் காரணமாகிவிட்டது!

இதனால் யாரை, எங்கு மறைவாக வைத்தாலும் அம்பின் குறியிலிருந்துத் தப்பிக்க முடியாது என்பது தெளிவாயிற்று. அவனைப் போர்க்களத்திலிருந்து விலக்கி வைக்க முடிவெடுத்தார் கிருஷ்ணர். அவன் எடுத்த சபதம் அறிவுக்கு எவ்வளவு பொருத்தமற்றது என்பதை விளக்கினார். கிருஷ்ணர் தனது விஸ்வ ரூபத்தைக் காட்டியருள, பர்பரீக் மெய்மறந்து வணங்கி நின்றான்.

""பர்பரீகா! இதற்குக் காரணம் உள்ளது. எதுவும் முறைப்படி நடக்க
வேண்டும். பாஞ்சாலி, பீமன், அர்ஜுனன் ஆகியோரின் சபதம் நிறைவேற வேண்டும். அதனால் போருக்கு முன் களப்பலி கொடுக்க உன்னைவிடத் தகுந்த சிறந்த வீரன் வேறு யாருமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது! என்று கூற, பர்பரீக் கண நேரமும் தயங்காமல் தன் கழுத்தைச் சீவிக் காணிக்கையாக்கினான்.

""அமரனான பர்பரீக், அவன் விருப்பப்படி ஞானக் கண்ணால் பாரதப்
போரைக் காண்பான்  எனக் கூறிய கிருஷ்ணர், அவன் சிரசை அமிர்தத்தில் நனைக்க வைத்து, குரு÷க்ஷத்திரத்தின் அருகில் ஒரு குன்றின் மீது சகல மரியாதைகளுடன் இருத்தினார். அரவானுடன் சேர்ந்து பர்பரீக்கும் பாரதப் போரின் நிகழ்வுகளைக் கண்காணித்தான். அவர்கள் கண்ட காட்சிதான் என்னே! உடலின் இடது புறம் ஐந்து முகங்கள், ஜடாமுடி, திரிசூலமுடன், வலப்புறம் ஒரு முகம் நான்கு கரங்களுடன், கவுஸ்துவமணி, சுதர்ஸன சக்கரம், மகுடமும் தரித்த ஓர் ஆஜானுபாகு அசகாயச் சூரனாக விளங்கிய கிருஷ்ண பரமாத்மாவே களப்பூமியெங்கும் சுழன்று பகைவர்களைத் துவம்சம் செய்து வெற்றிக் கொடி நாட்டியதைக் கண்ணாறக் கண்டு பேருவகை அடைந்தனராம்!

மேலும், அவனது வேண்டுகோளின்படி, "ஷ்யாம் எனும் தனது மற்றொரு பெயராலேயே கலியுகத்தில் அவனை. "ஷ்யாம் -பர்பரீகா என்று அனைவரும் போற்றி வணங்கிட கிருஷ்ணர் வரமளித்தார். இச்சம்பவம் நடந்தது ஒரு ஃபால்குன மாதம் செவ்வாய்க்கிழமை சுக்லபட்ச துவாதசி தினமாகும். இந்நாளே பெரும் உத்ஸவமாகப் பக்தி பரவசமுடன் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !